மானாமதுரை வாரச்சந்தையில் எடை குறைவாக காய்கறிகள் விற்பனை பொதுமக்கள் புகார்

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் எடை குறைவாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மானாமதுரை கீழ்கரையில் கன்னார் தெரு செல்லும் வழியில் வாரச்சந்தை உள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இந்த வாரச்சந்தைக்கு வருகின்றனர். வாரந்தோறும் வியாழக்கிழமை இந்த வாரச்சந்தை செயல்படுகிறது. மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, நரிக்குடி, சிவகங்கை தாலுகாவிலுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்களை வாங்க இந்த சந்தைக்கு வருகின்றனர். வாரந்தோறும் இச்சந்தையில் சராசரியாக 200 டன் காய்கறிகள், 10 டன் பழங்கள், மீன், கருவாடு என விற்பனை களை கட்டும்.

கடந்த சில மாதங்களாக இங்கு விற்கப்படும் காய்கறிகள், பழங்கள் எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், ‘‘வாரச்சந்தையி்ல் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் எடை குறைவாக இருக்கிறது. தொழிலாளர் நலத்துறையினர் ஆண்டுதோறும் எடைக்கல்லுக்கு முத்திரை போட்டு சரி பார்க்கின்றனர். ஆனால் சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தும் எடைக்கற்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி தேய்ந்து போனதாக உள்ளது. இவற்றின் மூலம் எடைபோடப்படும் ெபாருட்கள் கிலோவுக்கு 200 கிராம் வரை குறைவாக உள்ளது. அதே போல எலக்ட்ரானிக் தராசுகளிலும் மோசடி நடக்கிறது. விலை குறைவாக விற்பனை செய்வதாக கூறி விட்டு, வியாபாரிகள் மற்றொரு புறம் எடையை குறைத்து விடுகின்றனர். தொழிலாளர் நலத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Related Stories: