×

தூத்துக்குடியில் இறுதிகட்டத்தை எட்டிய இரட்டை ரயில் பாதை பணி: புதிய பாதையில் ஏப்ரல் முதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு

தூத்துக்குடி, மார்ச் 15: தூத்துக்குடியில் இரட்டை ரயில் பாதை பணிகள், இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய வழிப்பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியை மையமாக வைத்து வணிகம் செய்து வந்ததால் அவர்கள் தங்கள் போக்குவரத்து வசதிக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கடந்த 1874ம் ஆண்டு ரயில் வழித்தடம் அமைத்தனர். தூத்துக்குடி ரயில் நிலையம் திறக்கப்பட்டு 150 ஆண்டுகளை நெருங்கி உள்ளது. தமிழ்நாட்டில் பழமைவாய்ந்த ரயில் நிலையமாக தூத்துக்குடி ரயில் நிலையம் விளங்கி வருகிறது. பெருமைமிக்க தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்து வருகிறது. ரயில் சேவையை அதிகரிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ₹11,822 கோடி மதிப்பில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த புதிய ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே வாஞ்சிமணியாச்சியில் இருந்து மீளவிட்டான் வரை இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது தூத்துக்குடி நகர் பகுதியில் வேகமாக நடைபெற்று வருகிறது. அதற்காக அவ்வப்போது தூத்துக்குடியில் உள்ள ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு வருகின்றன.  இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிந்து ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து புதிய ரயில்வே தண்டவாளத்தில் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரவு, பகல் என்று பணிகள், 4ம் கேட் முதல் ரயில் நிலையம் வரை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலூர் ரயில் நிலையமும், புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் புதிய வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தூத்துக்குடிக்கு பல்வேறு பகுதியில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கவும் வாய்ப்புள்ளது.

Tags :
× RELATED தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு