×

தென்மலை அணை நீர்மட்டம் குறைந்தது தண்ணீர்தேடி படையெடுக்கும் வன விலங்குகள் கூட்டம்

செங்கோட்டை, மார்ச் 15: தென்மலை அணை நீர்மட்டம் குறைந்ததால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி நீர் நிலைகளை நோக்கி படையெடுக்கின்றன. கேரள மாநிலத்திலும் கடும் வெயில் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைத்து வருகிறது. தென்மலை வனப்பகுதியில் 1962ம் ஆண்டு கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழை, பத்தினம்திட்டா ஆகிய 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை கருத்தில் கொண்டு தென்மலை பரப்பாறு அணை கட்டப்பட்டது. 115.82 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது கடும் வெயில் காரணமாக 102.50 மீட்டராக குறைந்துள்ளது. மேலும் இந்த அணையை சார்ந்துள்ள நீர்நிலைகள், கிணறுகளில் தண்ணீர் வெகுவாக குறையத் துவங்கியுள்ளது. இந்த அணையின் நீர் மூலம் 7.5 மெகாவாட் மின்சாரம் ஜெனரேட்டர் மூலம் 24 மணி நேரமும் உற்பத்தி செய்யப்பட்டு கல்லடையாறு மற்றும் கால்வாய்களில் தண்ணீர் வெளியே விடப்படுகிறது.

வலது கரையில் 2.40 மீட்டர் அளவிலும், இடது கரையில் 2.20 மீட்டர் அளவிலும் தண்ணீர் செல்கிறது. பரப்பாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான பள்ளம்வெட்டி எர்த் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நின்று விட்டது. வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வற்றி விட்டதால் தற்போது காட்டுமான், காட்டெருமை, யானை  உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக காலை, மாலை நேரங்களில் பரப்பாறில் தண்ணீர் குடிக்க வருவது அதிகரித்துள்ளது. இதனால் இந்த அணையின் பின் சாலைகள் வழியாக பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையாக பயணம் செய்ய வலியுறுத்தப்படுகின்றனர்.

மேலும் இங்கு ரப்பர் மற்றும் ஊடுபயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் வெயிலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரப்பர் பால் வரத்து குறைந்ததால், பெரும்பாலான விவசாயிகள், பால் எடுப்பதை நிறுத்தி விட்டனர். மேலும் காட்டு தீயை தடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே வாழை, கத்தரி உள்ளிட்ட விவசாய பயிர்களை பயிரிட்ட விவசாயிகளும் வறட்சியால்  வேதனையில் உள்ளனர். பாசன வசதி இல்லாததால் பல இடங்களில் விவசாயம் நிறுத்தப்பட்டுள்ளது. பயிரிடப்பட்ட வாழைகள் பல இடங்களில் கருகிவிட்டன. இதை தடுக்க விவசாயிகள் வாழையை காய்ந்த இலைகளால் மூடி, தண்ணீர் பாய்ச்சி ஈரப்பதத்தை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Tenmalai Dam ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு