×

வியாசர்பாடி பகுதியில் உரிமம் பெறாத, சுகாதாரமற்ற 18 கடைகளுக்கு சீல்: வருவாய்த்துறை நடவடிக்கை

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் சுகாதாரமற்ற, உரிமம் பெறாத 18 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் உரிமம் இல்லாமல் இயங்கி வரும் கடைகள் மற்றும் சுகாதார சீர்கேடு உள்ள கடைகளைக் கண்டறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். அந்தவகையில் தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியில், ஆட்டுத் தோலை பதப்படுத்தி வெளியூர்களுக்கு விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் சுகாதார சீர்கேடு உள்ளதாகவும், இதனால் அக்கம்பக்கத்தினர் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் இந்த கடைகள் உரிமம் இல்லாமல் இயங்கி வருவதாகவும் புகார்கள் வந்தன.
அதன்பேரில், தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி மதிவாணன் உத்தரவின்பேரில், உதவி வருவாய் அலுவலர்கள் ராமன் மற்றும் ராஜ்குமார் தலைமையில், வரி மதிப்பீடாளர்கள் மற்றும் உரிமம் ஆய்வாளர் ஜோசப் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆட்டுத் தோலை ஏற்றுமதி செய்யும் பல கடைகள் உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து எருக்கஞ்சேரி சிங்காரம் தெரு, ஜிஎன்டி ரோடு பகுதியில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியிலும் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.
சுகாதார சீர்கேடு உள்ள தோல் கடைகளில் மருத்துவர் மகேஸ்வரன், துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் ஆட்டுத் தோல் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கடைகளுக்கும் சேர்த்து சீல் வைக்கப்பட்டது.  இவ்வாறு உரிமம் இல்லாத கடைகள் மற்றும் சுகாதார சீர்கேடு உள்ள கடைகள் என மொத்தம் 35, 36, 37 ஆகிய 3 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 18 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.  தொடர்ந்து உரிமம் இல்லாத கடைகள், சுகாதார சீர்கேடு உள்ள கடைகள், தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நிரந்தரமாக சீல் வைக்கப்படும், என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags : Vyasarpadi ,
× RELATED செயின் பறிக்க முயன்ற ரவுடி கைது