×

சின்னமலை முதல் ராஜ்பவன் வரை 2 கி.மீ., தூரத்துக்கு சென்னையில் முதல் முறையாக ரூ.20 கோடி செலவில் புட் ஸ்ட்ரீட்: மாநகராட்சி முடிவு

சென்னை: ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்ற சொல்லுக்கு பொருத்தமாக இருக்கிறது தமிழகத்தின் தலைநகர். வாழ்வாதாரத்தை தேடி பல்வேறு தரப்பட்ட மக்கள் சென்னைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால், ஆண்டுதோறும் சென்னையின் மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேபோல, சென்னையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளதால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இப்படி, பல்வேறு விதமான மக்கள் தொகை கொண்டதாக சென்னை உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான உணவு பிடிக்கும். ஒரு சிலருக்கு தென்இந்திய உணவுகள், வடஇந்திய உணவுகள் பிடிக்கும், மற்றவர்களுக்கு சைனீஸ், தாய் அல்லது பிற நாட்டு உணவுகள் மீது மோகம் இருக்கும். சென்னையை பொறுத்தவரை அனைத்து உணவுகளும் கிடைக்கிறது. உணவுப்பிரியர்களும் இங்கு அதிகம்.

ஆனால், இந்த உணவுகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் கிடைக்கிறது. மேலும், சென்னையில் உணவுத் திருவிழாக்களை நடத்துவதற்கு சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதன் காரணமாக, தீவுத்திடல் போன்ற மைதானங்களில் தான் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள சில உணவு சாலைகள் மிகவும் பிரபலம். ஆனால், இவை எதுவும் மிக  நீளமானது கிடையாது. அதாவது ஒரு சில கடைகளோடு இருக்கும் இந்த புட்  ஸ்ட்ரீட்கள் மிகப்பெரிய அளவில் இல்லை. எனவே, பல்வேறு தரப்பட்ட மக்களின் உணவு வகைளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. அதன் அடிப்படையில், சென்னையில் ‘புட் ஸ்ட்ரீட்’(உணவுச் சாலை) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை உள்ள 2 கி.மீ நீளச்சாலையை உணவுச் சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  ரூ.20 கோடி செலவில் இந்த உணவுச் சாலை அமைய உள்ளது. இதன் மூலம் வருமானமும் கிடைக்கும். முக்கியமாக மாநகராட்சிக்கு நேரடியாக வாடகை வருவாய் இதன் மூலம் அதிகம் கிடைக்கும். பல உணவு வகைகள் ஒரே இடத்தில்  கிடைக்கும் விதமாக, அரசு சார்பாக மொத்தம் 2 கி.மீ., நீளத்தில் இந்த புட் ஸ்ட்ரீட் அமைக்கப்பட உள்ளது. உள்ளே பல  அரங்குகள் இருக்கும் விதமாகவும், சிறிய பூங்கா இருக்கும் வகையில், சர்வதேச  தரத்தில் இந்த புட் ஸ்ட்ரீட் அமையும். சாலையின் இரண்டு புறமும்  கடைகள் அமைக்கப்படும். அதோடு சாலை பெரிதாக்கப்படும். விரைவில் பணிகள்  தொடங்கப்பட்டு அதன்பின் கடைகள் வாடகைக்கு விடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:  சென்னையில் உள்ள அனைத்து பிரபலமான உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று ஒரு திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த சாலையில் இரண்டு புறமும் நடைபாதைகள் பெரிதாக அமைக்கப்படும். மேலும், அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும். பிரதானமான சாலை என்பதால் மக்கள் அதிகம் வருவார்கள்.  இதன்பிறகு சென்னையில் பிரபலமாக உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து உணவகங்களையும் இங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் உணவு திருவிழாக்கள் நடத்த ஏற்ற இடமாக இது இருக்கும்.

இதற்கான தொடக்க கட்ட பணிகள் நடைபெற்றது. விரைவில் இந்த பணிகள் இறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும், 2 ஆண்டுக்களுக்குள் இந்த பணிகள் முழுமையடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* சுற்றுலா நகரமாகும் சென்னை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தை, ஆட்சி பொறுப்பேற்றது முதல் திமுக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடியும், மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்யயவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : Chinnamalai ,Rajbhavan ,Putt Street ,Chennai ,
× RELATED கோகுல்ராஜ் கொலை வழக்கின் ஆயுள் கைதி...