×

திருவள்ளூர் மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டிற்கு மாணவர்கள் தேர்வு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா மாவட்ட மையம், திருவள்ளுர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் கால்பந்து விளையாட்டிற்கு மாணவ விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்மையத்தில் குறைந்தது 30 முதல் 100 விளையாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு வல்லுநர்களை கொண்டு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் சேருவதற்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தேர்வுப் போட்டிகள் எதிர்வரும் வரும் 16ம் தேதி காலை 9 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, சிறந்த பயிற்சியாளர் மூலம், தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும்.

மேற்படி மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும். எனவே, அரசு வழங்கும் பயன்களை கருத்தில் கொண்டு, வரும் 16ம் தேதி காலை 9 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் கால்பந்து தேர்வுப் போட்டிக்கு திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில் பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvallur District ,
× RELATED பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து...