காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், எஸ்பியிடம் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில், பொதுமக்களுக்கு இடையூறாக கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், போலீஸ் எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரத்தின் பிரதான பகுதியான ரயில்வே சாலையில் பழைய ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், எல்ஐசி அலுவலகம், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் வையாவூர், களியனூர் மற்றும் சென்னை செல்வதற்கு ராஜகுளம் செல்லும் புறவழிச்சாலை, வாலாஜாபாத் வழியாக செங்கல்பட்டு செல்லும் புறவழிச்சாலை உள்ளிட்ட முக்கிய சாலையாக உள்ளது.

மேலும் வையாவூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளி, வளர்ந்து வரும் புறநகர் பகுதியான எச்எஸ் அவென்யூ, அறிஞர் அண்ணா நகர், ரமணா நகர், சரஸ்வதி நகர், பாலாஜி நகர், செல்வகணபதி நகர் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்திற்கு சரக்குகளை ஏற்றிச்செல்ல வரும், கனரக லாரிகள் சாலையோரங்களில் நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து அரிசி ஆலைகளுக்கு நெல் ஏற்றிச்செல்ல வரும் லாரிகள் சாலையின் இருபுறமும் வரிசையாக நிறுத்திவைப்படுவதால், காலை நேரங்களில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும் நோயாளிகள், இந்த சாலை வழியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்படுகின்றனர். அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் குறித்து போக்குவரத்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Related Stories: