வீட்டு மாடியில் இறந்து கிடந்தார் துபாயில் இருந்து சொந்த ஊர் வந்த தொழிலாளி மர்மச்சாவு கொலையா, தற்கொலையா?

காரியாபட்டி: நரிக்குடி அருகே வீட்டில் மர்மமான முறையில் தொழிலாளி இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நரிக்குடி அருகே உள்ள உச்சநேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன்(43), பிளம்பர். இவரது மனைவி மல்லிகா (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முனீஸ்வரன் கடந்த 18 ஆண்டாக துபாயில் பிளம்பர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜன.26ல் சொந்த ஊருக்கு வந்த முனீஸ்வரன் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தினார். இதில், வந்த மொய் பணத்தில் அடகு வைத்த நகைகளை திருப்பினார். மேலும், முனீஸ்வரனுக்கு பணம் தேவைப்பட்டதால், துபாயில் இருந்தபோது அனுப்பிய பணத்தை மனைவியிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முனீஸ்வரன் வீட்டு மாடியில் இறந்து கிடப்பதாக, அவரது தாயார் இருளாயிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருளாயி கிராமத்திற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது முனீஸ்வரன் அருகே விஷ மருந்து பாட்டில் கிடந்ததாக கூறப்படுகிறது.  இது குறித்த தகவலின்பேரில், கட்டனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முனீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: