×

கஜா புயலால் உருக்குலைந்தது அங்கன்வாடி மையத்திற்கு ரூ.15 லட்சத்தில் புதிய கட்டிடம்

முத்துப்பேட்டை: திருவாருர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கற்பகநாதர்குளம் கிராமத்தில் அரசு அங்கன்வாடி குழந்தைகள் மையம் ஒன்று உள்ளது.  இதில் அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். 1975ம் ஆண்டு  பள்ளியாக துவங்கப்பட்டது. அதன்பின்னர் அங்கன்வாடி மையமாக மாறியது.  இந்த பள்ளி அன்று முதல் மிக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 15ம்தேதி தாக்கிய கஜா புயலால் உருக்குலைந்தது. இதனால் அங்கன்வாடியை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இதனால் அப்பகுதி மரத்தடியில் பள்ளி இயங்கி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதிகாரிகள் இந்த கட்டிடத்தை சீரமைக்க வில்லை. மேலும் மழைக்கால நேரத்தில் பள்ளி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல பொருட்களை வைக்கவும், பாதுக்காப்பற்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதனால் நாளடைவில் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து பள்ளியை இழுத்து மூடும் நிலைக்கு மாறிவிடும். எனவே இனியும் காலதாமதம் படுத்தாமல் அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக தற்போதைய அரசு கவனத்திற்கு எடுத்துக்கொண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ரூ. 15லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து சமீபத்தில் சேதமான கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய கட்டுமானப்பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


Tags : anganwadi ,Gaja ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்