×

போலீசை தாக்கிவிட்டு இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ரவுடி தப்பியோட்டம்: கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி:  திருட்டு வழக்கில் சிக்கியபோது இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரவுடி போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் லாரி உற்பத்தி தொழிற்சாலை, காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, இரும்பு உருக்காலைகள், கெமிக்கல் தொழிற்சாலை, ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாக தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் ஏற்கனவே இலங்கை அகதிகள் முகாம்களை சேர்ந்த சில இளைஞர்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகள் முகாமில் கணக்கெடுப்பின்போது  பல வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் காணாமல் போவதும், அவர்கள் பலர் வெளி மாநிலம், அயல் நாட்டுக்கு செல்வதும் வழக்கமாக உள்ளது. இதனை கியூ பிரான்ச் போலீஸார் கண்டும் காணாமல் போவதாக அதேபகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், இந்த முகாமில் கஞ்சா கடத்தலில் 10க்கும் மேற்பட்டோர் இதுவரை கைதானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல ரவுடியான இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராபின்சன்(44) மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. நேற்று மதியம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள லாரி உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பின்பக்க வழியாக இறங்கி இரும்புப் பொருட்களை அமுதராஜ் (34), ஜான் (26) ஆகியோருடன் சேர்ந்து திருட முயன்றுள்ளார். இதை சுதாரித்துக் கொண்ட தொழிற்சாலை காவலாளர் முத்து, அவர்களை விரட்டியபோது ராபின்சன் முத்துவின் முகத்தில் தாக்கியுள்ளார். உடனடியாக முத்து, சிப்காட் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலமாக புகாரளித்தார். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

அதற்குள் ராபின்சன், அமுதராஜ், ஜான் ஆகியோர் மதில் சுவரில் ஏறி, இலங்கை அகதிகள் முகாமில் பதுங்கினர். போலீசார் அவர்களைப் பிடித்துக்கொண்டு போலீஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தையொட்டி ஜான், அமுதராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது வாகனத்தில் அமர்ந்திருந்த ராபின்சன் தப்பிக்க முயன்றார். அவரை சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பிடிக்கும்போது, அருகே இருந்த பீர் பாட்டிலை உடைத்து சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் ராமதாசை ராபின்சன் குத்த முயற்சித்துள்ளார்.

இதில் போலீசார் சுதாரித்துக் கொண்ட நிலையில் ராபின்சன் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பின்னர் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பனுக்கு தொலைபேசி மூலம் போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் சுமார் 10 போலீசாருடன் சேர்ந்து இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ராபின்சனை தீவிரமாக தேடி வருகிறார். மேலும் சிப்காட் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்து, ராபின்சனை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்பற்றி இலங்கை அகதிகள் முகாம் வாழ் மக்கள் கூறுகையில், முகாமில் பழைய அங்கன்வாடி கட்டிடத்தில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் குடித்துவிட்டு அட்டகாசம் செய்கின்றனர். அவர்கள் பெண்களை கிண்டல் செய்வதும் வழக்கமாகியுள்ளது. இது சம்பந்தமாக போலீசாரிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.

Tags : Rowdy ,Kummidipoondi ,
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது