அறங்காவலர் குழு தலைவராக முன்னாள் எம்எல்ஏ தேர்வு

அருப்புக்கோட்டை, மார்ச் 14: விருதுநகர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக முன்னாள் எம்எல்ஏ கே.எம்.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலைய துறை ஆணையரின் பரிந்துரையினை அரசு கவனமாக பரிசீலனை செய்து, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டம் 1959 சட்டப்பிரிவு 7 ஏ.யின் கீழ், விருதுநகர் வருவாய் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சட்டப்பிரிவு 46ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களை தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்து பரிந்துரைப்பதற்கு, விருதுநகர் வருவாய் மாவட்டத்திற்கு கீழ்க்காணும் 5 நபர்களை உறுப்பினர்களாக கொண்ட மாவட்டக்குழு அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இக்குழுவின் விருதுநகர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக முன்னாள் எம்எல்ஏ கே.எம்.விஜயக்குமார், உறுப்பினர்களாக காரியாபட்டி சொக்கலிங்கம், நரிக்குடி ஆனந்தம், ஆத்திபட்டி ஆறுமுகம், வத்திராயிருப்பு கோட்டையூர் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்குழுவினர் மாவட்டத்தில் உள்ள கோவில் வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து கோவில்களுக்கு அறங்காவலர் குழுவை நியமிப்பார்கள். அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கே.எம்.விஜயக்குமார் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

Related Stories: