கம்பம் பகுதியில் இல்லம் தேடி சென்று மாற்றுத்திறனாளிளுக்கு உபகரணங்கள் நகராட்சி தலைவர் வழங்கினார்

கம்பம், மார்ச் 14: தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா 3 சக்கர ஸ்கூட்டர், 3 சக்கர சைக்கிள், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், செயற்கை கால், கைகள், காது கேட்கும் கருவி, இலவச பேருந்து அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் மூலம் பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவிகள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் ‘‘மாற்றுத்திறனாளிகளை மீட்டெடுப்போம்” புதிய முயற்சியாக கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு ஊன்றுகோல், 3 சக்கர சைக்கிள், மாதந்திர உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர், நலவாரிய உறுப்பினர் மூலம் பெறப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன்படி முதற்கட்டமாக 1வார்டு முதல் 3வது வார்டு வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களின் இல்லங்களுக்கு நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நேரடியாக சென்று ஊன்றுகோலை வழங்கினார். அதன்படி 1 வார்டில் இந்திரா(40), 2வது வார்டில் தங்கராஜ்(52), 3வது வார்டில் இளங்கோவன்(50) உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் கருப்பையா, கவுன்சிலர்கள், மூத்த வழக்கறிஞர் துரை.நெப்போலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். உபகரணங்களை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Related Stories: