×

மானாமதுரை அருகே ரயிலில் அடிப்பட்டு 4 மான்கள் சாவு

மானாமதுரை, மார்ச் 14: மானாமதுரை அருகே கிருங்காகோட்டை எதிரே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 புள்ளி மான்கள் அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியாகின. மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை அருகே உள்ள கிருங்காகோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராம கண்மாய் மற்றும் சிட்கோ வனப்பகுதிகளில் சும்மா 45 முதல் 55 வரை புள்ளி மான்கள், கவரிமான்கள் உள்ளன. இவைகள் தற்போது கோடை காலம் ஆரம்பிக்கும் சூழ்நிலை இருப்பதால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் காட்டுப் பகுதியை விட்டு வெளியே வருகிறது. அவ்வாறு வரும்போது நேற்று அதிகாலை ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளன.

அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயில் புள்ளிமான்கள் மீது மோதியுள்ளது. ரயில் சக்கரத்தில் சிக்கி நான்கு புள்ளி மான்கள் இறந்து போயின.
இறந்த 4 மான்களில் தலா இரண்டு ஆண், பெண் புள்ளி மான்கள் ஆகும். இவற்றின் எடை சராசரியாக 35 கிலோவுக்கு மேல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வனவர் ராஜேஷ், வனப்பாதுகாவலர் தங்கச்சாமி உள்ளிட்ட வனத்துறையினர் வந்து சிதைந்து கிடந்த மான்களின் உடல்களை அப்புறப்படுத்தினர். பின்னர் மானாமதுரை கால்நடை மருத்துவர் விக்னேஷ் உடல்களை பரிசோதனை செய்து வனத்துறையினர் புதைத்தனர்.

இப்பகுதியில் புள்ளிமான்கள் பெருகி வரும் நிலையில் இங்குள்ள கண்மாய்களில் நீர் பற்றாக்குறையால் சாலை, ரயில் தண்டவாளங்களை கடக்க முயலும் மான்கள் ரயில் உள்ளிட்ட வாகனங்களில் இறப்பது தொடர்கிறது.கிருங்காகோட்டை சமூக ஆர்வலர் ராஜசேகர் கூறுகையில், கிராம கண்மாய் மற்றும் சிட்கோ வனப்பகுதிகளில் புள்ளி மான்கள், கவரிமான்கள் உள்ளன. இவைகள் தற்போது கோடை காலம் ஆரம்பிக்கும் சூழ்நிலை இருப்பதால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் காட்டுப் பகுதியை விட்டு வெளியே வருகிறது.

அவ்வாறு வரும்போது ரயில்பாதை, நான்கு வழிச்சாலையை கடக்கும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. வனத்துறையினர் இது பற்றி சிறப்பு கவனம் செலுத்தி இந்தபகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து வனவிலங்குகளுக்கு தேவையான நீர் கிடைத்திட ஆங்காங்கே பள்ளங்களை ஏற்படுத்தி நீர் நிரப்பவும், வாகனங்கள் மோதாமலும், வேட்டைகாரர்களால் வேட்டையாடப்படாமலும் இருக்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

Tags : Manamadurai ,
× RELATED 15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது