×

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பை தடுக்க 167 சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பை தடுக்க 167 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வு திட்ட நடவடிக்கையாக காய்ச்சல் தொற்றை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் மாநகராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் மொத்தம் 167 காய்ச்சல் தடுப்பு முகாம் தினம் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. மருத்துவ நிபுணர் தலைமையில் செவிலியர், ஆய்வக நுட்பநர், உதவியாளர் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்த முகாம்கள் மூலம் தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு குறித்து கண்டறிய மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேல்சிகிச்சைக்காக சிலர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் தொற்று ஏற்படுகிறது. உடல் வலி, தொண்டை வலி, இருமல் சளியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது.

மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இந்த காய்ச்சல் சில நாட்கள் நீடிக்கிறது. இந்த பாதிப்பு காற்று மூலம் ஏற்படுகிறது. முகக்கவசம் அணிவதன் மூலம் மக்கள் இந்த பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம். இந்த காய்ச்சல் பெரிய பாதிப்பை உண்டாக்காது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை முடிந்தவரை குழந்தைகள், முதியோர்கள் தவிர்க்கலாம். இணை நோய் உள்ளவர்கள் தங்களது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது” என்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ