×

டி.கல்லுப்பட்டி, பேரையூரில் திடீர் ஆய்வுஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுறுத்தல்

பேரையூர், மார்ச் 14: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று திடீரென்று ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: மதுரை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்திற்கேற்ப, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமப்பகுதி மக்களுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை முழுமையாக கொண்டு சேர்க்கவும், அதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வீடுகள் கட்டும் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, உடனடியாக பணிகளை முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசின் மூலம் வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விற்பனையாளர்கள் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகள் அனைத்தும் சொந்த கட்டிடங்களில் இயங்க வேண்டும் என்பதற்காக, புதிய நியாய விலைக்கடைகள் கட்டுவதற்கான கட்டிடப்பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வு கூட்டத்திற்கு பின், அமைச்சர், வன்னிவேலன்பட்டி, ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின் அப்பகுதி ரேஷன் கடையை ஆய்வு செய்ததுடன், பொதுமக்களுக்கு தரமான அரசி வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் புல்லுக்கட்டை ஊராட்சியில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பொன்னையாபுரம் ஊரணியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், கலெக்டர் அனீஷ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், தாசில்தார் ரவிச்சந்திரன், ஆணையாளர்கள் சிவசங்கரநாராயணன், ஆசிக், திமுக மாவட்ட மாணவரணி பாண்டி முருகன், ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன், தனசேகரன், பாண்டி, சேடபட்டி சங்கரபாண்டி, உசிலம்பட்டி அஜித் பாண்டி, செல்லம்பட்டி முத்துராமன், பேரையூர் பேரூராட்சி சேர்மன் குருசாமி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமாட்சி, திமுக நிர்வாகிகள் முருகன், செல்வம், வருசை, சாதிக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : D. Kallupatti ,Beraiyur ,Minister ,I. Periyaswamy ,
× RELATED திருமங்கலம் அருகே ஓடும் வேனில் திடீர் தீ: பொருட்கள் எரிந்து நாசம்