×

தர்மபுரி மாவட்டத்தில் 85 மையங்களில் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வை 19,620 மாணவர்கள் எழுதினர்

தர்மபுரி, மார்ச் 14: தர்மபுரி மாவட்டத்தில் 82தேர்வு மையங்களில் நேற்று நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வை 19,620 மாணவ, மாணவிகள் எழுதினர். 2,680 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொது தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது என பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வு கட்டுப்பாட்டுடன் நேற்று தொடங்கியது.

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வரும் ஏப்ரல் 3ம் தேதி தேர்வு முடிகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, 3 உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி, 1 சமூக நலத்துறையின் மேல்நிலைப்பள்ளி, 5 சுய நிதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளை சேர்ந்த, 22,301 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், 19,620பேர் தேர்வு எழுதினர். இதில் ஒருவருக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2,680பேர் தேர்வு எழுத வரவில்லை.  

மாவட்டத்தில் 82தேர்வு மையங்களில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தமிழ் பாடத்தேர்வு பிற்பகல் 1.15மணிவரை நடந்தது. முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வு எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தேர்வு அறை கண்காணிப்பாளர்களிடம் உஷாரா கண்காணிக்கும்படி உத்தரவிட்டார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் லளிகம், அதியமான்கோட்டை, தர்மபுரி அரசு பள்ளிகளில் நடந்த பிளஸ்2 தேர்வுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தேர்வு முடிந்த பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், விடைத்தாள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு ஒரு போலீஸ், ஒரு ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இத்தேர்வு பணிகளில் 3500 அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 82 பறக்குபடையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து தேர்வு மையங்களில், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் நாட்களில், தேர்வு மையங்களில் பஸ்கள் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கு, போதிய குடிநீர் வசதி உள்ளது. தேர்வு மையங்களை ஆய்வு செய்தல் மற்றும் பறக்கும் படை அமைத்து தேர்வுகள் புகாருக்கு இடமின்றி நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (14ம் தேதி) பிளஸ்1 பொதுத்தேர்வு நடக்கிறது.

82 தேர்வு மையங்களில் 19600 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். எனவே மாணவ, மாணவிகள் இத்தேர்வை உண்மையாகவும், நேர்மையாகவும், எவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வு பணிகளில் ஈடுபடுபவர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு, தேவையான அனைத்து பணிகளையும் அந்தந்த அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்வதோடு, எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Plus 2 public examination ,Dharmapuri district ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...