×

புற்றுநோயை கண்டறிய நெல்லை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் பெட் ஸ்கேன் வசதி

நெல்லை,  மார்ச் 14: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறியும் பெட் ஸ்கேன் வசதி  ரூ.10 கோடி  மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில்  செயல்பாட்டுக்கு வர உள்ளதால் தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்  என டீன் டாக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகளிர் தினத்தையொட்டி ‘பெட் இமாஜிங்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை வகித்த மருத்துவக்கல்லூரி  டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துவக்கிவைத்துப் பேசுகையில் ‘‘நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு மருத்துவ துறைகள் சிறப்பாக இயங்குகின்றன.  மண்டல கேன்சர் மையம் அமைக்கப்பட்ட பிறகு தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான  கேன்சர் நோயாளிகள் பயனடைகின்றனர். மேலும் இங்கு கூடுதலாக  சிறப்பு கருவி வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக  ரூ.10 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய பெட் ஸ்கேன் வசதி அமைக்கப்பட்டுள்ளது.  இது தற்போது பரீட்சார்த்த முறையில் இயங்குகிறது. விரைவில் மக்கள்  பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்த பெட் ஸ்கேன் மூலம் கேன்சர்  பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க  முடியும். முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழைகளும்  பயன் பெறுவார்கள். தென் மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்த நிலையில் இந்த வசதி  இங்கு கிடைத்துள்ளது’’ என்றார்.

 இதைத்தொடர்ந்து மருத்துவமனை  கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், உயர் சிறப்பு மருத்துவமனை துணை  கண்காணிப்பாளர் கந்தசாமி, காது, மூக்கு தொண்டை சிகிச்சை துறைத் தலைவர்  சுரேஷ்குமார், நுண் கதிர் சிகிச்சை துறைத் தலைவர் தெய்வநாயகம், ரேடியாலஜி  துறைத் தலைவர் டாக்டர் நான்சி டோரா வாழ்த்திப் பேசினர். நியூக்கிளியர் மெடிசன்  துறை டாக்டர் சர்ச்சில் லாரா பெட் ஸ்கேன் பயன்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.  கருத்தரங்கில் ரேடியாலஜி  துறை டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், தலைமை  நுண்கதிர் நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள், பட்டதாரி மற்றும் டிப்ளமோ  மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ரேடியாலாஜி  துறை  இணைப் பேராசிரியர் மகூப்கான் நன்றி கூறினர்.

Tags : Nellai ,Government Hospital ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!