கோடை காலம் தொடங்கியதன் எதிரொலி ஆந்திராவை நோக்கி படையெடுக்கும் கள் பிரியர்கள்: உடலுக்கு நல்லது என புதுவிதமான விளக்கம்

பெரம்பூர்: கோடை காலம் தொடங்கியதன் எதிரொலியாக ஆந்திராவை நோக்கி கள் பிரியர்கள் படையெடுத்துள்ளனர். கள் உடலுக்கு நல்லது என அவர்கள் புதுவிதமான விளக்கம் தருகின்றனர். ஆதி காலம் தொட்டு தற்போது வரை மனிதன் ஏதாவது ஒரு போதைக்கு அடிமையாகி அதன் போக்கிலே வாழ்ந்து வருகிறான். தாய்ப்பாலும் போதை தரும், சாராயம் போதை தரும் இரண்டையும் பிரித்துப் பார்க்க புத்தி இல்லை என்ற சினிமா பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனுக்கு ஒரு வகையான போதை தேவைப்படுகிறது. அந்த வகையில் தற்போது குட்கா, பான்மசாலா, பீர் என பல்வேறு போதை வஸ்துக்களை ஆண்கள் பயன்படுத்தி வந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கிடைக்கும் கள் எனப்படும் ஒரு வகையான பானத்திற்கு ஆண்கள் பலரும் அடிமையாகி கிடக்கின்றனர்.

புராண காலத்தில் இருந்தே இந்த கள்ளுக்கு பல்வேறு வரலாறுகள் உண்டு. கள் என்பது பனை மற்றும் தென்னை போன்ற மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் குறைவான போதை ஏற்படுத்தும் பானமாகும். பனை அல்லது தென்னை மரங்களில் இருந்து வடியும் பால் போன்ற திரவம் மண்பானையில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு கலந்த சுவையுடன் உள்ளது. இதை அருந்துபவர்களுக்கு ஒருவிதமான லேசான போதை ஏற்படுகிறது. பனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனை மரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் குருத்து என்கின்ற விழுதை சரியான முறையில் வெட்டி அதனை ஒரு சிறிய மண்பாண்டத்தில் செலுத்தி, மண்பாண்டத்தின் கழுத்து பகுதியை கயிற்றால் கட்டி, அதனை மரத்துடன் கட்டுவார்கள்.

மண்பாண்டத்தின் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் நீரே பனங் கள் ஆகும். பனங் கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் என்னும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உஷ்ணத்தை நீக்கி, அது உடலில் குளிர்ச்சியைத் தரும் என சிலர் தெரிவிக்கின்றனர். அது வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும் குணமடையது எனவும் தெரிவிக்கின்றனர். பனங் கள்ளில் இருந்து பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பணஞ்சக்கரை போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பதற்கும், விற்கும் கள்ளை வாங்கி குடிப்பதற்கும் 1987ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

எதற்காக தடை செய்யப்பட்டது என ஆராயும்போது, பனை மரத்திலிருந்து இறக்கும் கள்ளில் போதை மிகவும் குறைவு என்பதால், கூடுதலான போதை வேண்டும் என்பதற்காக பல ரசாயனங்களை கலந்து விற்கப்படுவதாகவும், இதனால் அதனை பருகுபவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், ஒவ்வொரு இடத்திலும் நேரில் சென்று கள்ளில் கலப்படம் உள்ளதா என்பதை ஆராய முடியாது என்ற காரணத்தினால் கள்ளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இவ்வாறு தமிழகத்தில் கள்ளுக்கு தடை உத்தரவு இருப்பதால் சென்னையை அடுத்துள்ள ஆந்திர மாநில எல்லையில் கள் இறக்கப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா எல்லையான பனங்காடு உள்ளது. ஆரம்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் கள் இறக்கி விற்கப்படுகிறது. கொல்கத்தா நெடுஞ்சாலையில் பல இடங்களில் இந்த கள் விற்கப்படுவதை பார்க்கலாம். அங்குள்ள ஊருக்குள் சென்றால் மிகவும் பிரஸ்ஸாக நம் கண்முன்னே கள் இறக்கி தருவார்கள்.

காலை மற்றும் மாலை என அங்கு இரு வேளைகளில் கள் இறக்கப்படுகிறது. இதே போன்று ஊத்துக்கோட்டை பகுதியைத் தாண்டிச் சென்றால், ஆந்திர எல்லைப் பகுதியான சத்தியமேடு, சூலூர்பேட்டை, நெல்லூர் போன்ற இடங்களுக்கும் சென்னையில் இருந்து கள் பிரியர்கள் சென்று, கள் குடித்துவிட்டு வருகின்றனர். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் கும்பல் கும்பலாகச் சென்று குறிப்பிட்ட இடங்களில் கள் குடித்து வருகின்றனர். இதற்காக கள் இறக்கும் இடங்களை சுற்றி அவர்களுக்கான சைடிஷ் எனப்படும் அசைவ உணவு வகைகளும் செய்து தரப்படுகின்றன.

குறிப்பாக வாத்துக்கறி‌, நாட்டுக்கோழி முட்டை வறுவல், கருவாடு போன்ற சைடிஷ் வகைகள் அங்கு வீடுகளில் செய்து தரப்படுகின்றன. போதை மிகவும் குறைவு என்பதாலும், குடிப்பதற்கு நன்றாக இருக்கின்றது என்பதாலும், மேலும் கோடைகாலத்தில் உஷ்ணத்தை தணிப்பதாலும் பலரும் வார விடுமுறைகளில் ஆந்திர எல்லைக்கு கள் குடிப்பதற்காக படையெடுக்கின்றனர். இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஆந்திர எல்லையில் திருவிழாபோல் ஒவ்வொரு தோப்பிலும் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காலகட்டத்தில் சரியான வியாபாரம் இல்லாமல் தவித்துவந்த கள் இறக்குமதியாளர்கள், தற்போது படையெடுக்கும் சென்னை இளைஞர்களால் புத்துணர்ச்சி அடைந்துள்ளனர்.

* கலப்படம் அதிகம்

பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளில் சர்க்கரை மற்றும் பூசணிக்காய் கலந்து விற்கப்படுவதாகவும், இதனால் கள்ளின் சுவை மாறுபட்டு சிறிது போதை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் மிகவும் மலிவாக கிடைக்கும் சில மாத்திரைகளை சிலர் கள்ளில் கலந்து விற்பனை செய்து வருவதாகவும், இதனால் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை குடிப்பதால் உடல் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் ஏற்படும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.    

* சீசனில் மட்டுமே கிடைக்கும்

கள் என்பது அனைத்து நாட்களிலும் கிடைக்கும் பானம் கிடையாது. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அது கிடைக்கிறது. குறிப்பாக பிப்ரவரி மாதம் முடியும் தருவாயில் அந்த சீசன் தொடங்குகிறது. அது மே மாதம் வரை செல்கிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் கள் நன்றாக கிடைக்கும். அதன்பிறகு அதன் சீசன் முடிவடைந்து மே மாதத்தில் இருந்து கள் இறக்குமதி படிப்படியாக குறையும். ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தோப்புகளை பலரும் குத்தகைக்கு எடுத்து இந்த 3 மாதங்களில் மட்டும் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பிட்ட குத்தகை காலம் முடிந்தபிறகு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர்.

* ஒரு ஜக்கு 20 ரூபாய்

ஆந்திர எல்லையில் விற்கப்படும் கள் ஒரு ஜக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்படுகிறது. இதில் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு ரூ.20க்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.25க்கும் விற்கப்படுகிறது. அதுவே ஒரு குடமாக வாங்கினால் குடத்திற்கு ஏற்றார்போல் ரூ.400ல் இருந்து ரூ.600 வரை விற்கப்படுகிறது. தெலுங்கில் பேசினால் சற்று குறைவாகவும், தமிழில் பேசினால் சற்று அதிகமாகவும் விற்கப்படுவதாக கள் குடித்து வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

* ஆண், பெண் மரங்கள்

கள் இறக்கும்போது சிலர் அது எந்த மரத்துக் கள் என்று கேட்பார்கள். ஆண் மரமா? பெண் மரமா? என கேட்பார்கள். ஆண் மரக் கள் அதிக வீரியம் உள்ளதாகவும், பெண் மரக் கள் சற்று வீரியம் குறைவாக உள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். மேலும 41 நாட்கள் தொடர்ந்து ஆண்மரத்தின் கள்ளை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் சிலர் ஆண் மரக் கள் மட்டுமே வேண்டும் என கேட்டு வாங்கி பருகி வருகின்றனர்.

Related Stories: