×

சீமைகருவேல மரங்களை அகற்றி செட்டிக்குளம் ஏரிக்கு புதிய மதகுகள் அமைக்க வேண்டும்: வாய்க்கால்களை தூர் வாருங்கள் விவசாயிகள் வலியுறுத்தல்

பாடாலூர், மார்ச் 13: பாடாலூர் அருகே ஆலத்தூர் தாலுகா,செட்டிகுளம் ஏரியை பரவலாக ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் இங்கு புதிய மதகுகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,செட்டிகுளம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 166 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று உள்ளது. பெரிய ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கு சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தால் வரத்து வாய்க்கால்கள் மூலம் மழைநீர் அதிகளவில் வரும். மேலும் அருகே உள்ள மலைப்பகுதியில் இருந்தும் ஊற்று நீர் இந்த ஏரிக்கு வரும். ஏரிக்கரையின் மேற்குபுறம் ஏராளமான விவசாய பாசன நிலங்கள் உள்ளன. இந்த ஏரி நிரம்பினால் பாசன வாய்க்கால் மூலம் சுமார் 100 மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்.

தற்போது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் கிடக்கின்றன. இதனால் மழை பெய்யும் காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் மழைநீர் உரிய வழியில் பயன்படாமல் வீணாகும் நிலை உள்ளது. மேலும் மழைநீரை ஏரியில் சேகரிக்க முடியாததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. ஏரி பகுதியில் பரவலாக சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. பாசன வாய்க்கால்களுக்கு ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் மதகும் பழுதாகி விட்டது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக செல்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 1 ஆண்டு முன்பு மழை பெய்ததில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவு எட்டி உபரி நீர் சென்றது. மதகு பழுதானதால் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வீணாகி விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டன. தற்போது இந்த ஏரியில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஏரி மற்றும் அதன் வரத்து வாய்க்கால், பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மேலும் ஏரியின் கரைகளையும் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, கரையை அகலப்படுத்த வேண்டும்.

மேலும் ஏரியில் உள்ள 2 படித்துறைகள் மற்றும் 2 பழைய காலத்திலான மதகை அகற்றி தற்போதைய நவீன முறையிலான மதகுகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த ஏரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.மழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் வந்ததால் பணி செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Seemaikaruvela ,Chettikulam lake ,
× RELATED சீமைகருவேல மரங்களை அகற்றி...