×

சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தேரோட்டம்: கலெக்டர் வடம்பிடித்து துவக்கி வைத்தார்

சீர்காழி,மார்ச் 13: சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தேரோட்டம் நடந்தது. இதில் கலெக்டர் மகாபாரதி தேரை வடம்பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிர்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். மேலும் இக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமாக புராணங்கள் கூறுகின்றன.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு, காவிரி வடகரைத்தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவபெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா நடை பெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு இந்திரப்பெருவிழா கடந்த பிப்ரவரி 4ம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கியது. அதனை தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வான 9ம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருதேர் திருவிழாவை முன்னிட்டு முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் சண்டிகேஸ்வரர் அடுத்தடுத்த மூன்று தேர்களில் எழுந்தருள திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக தேரோட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து திருத்தேர் நான்கு மாடவீதிகளையும் வலம் வந்தது நிலையை அடையந்தது விழாவில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், ஆர்டிஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு குமார், ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன், அறங்காவல் குழு உறுப்பினர் துரைராஜன், ஊராட்சி தலைவர் சுகந்தி நடராஜன், ஊராட்சி செயலாளர் கார்த்திக் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் சிவானந்தம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Tiruvengadu Suvedharanyeswarar Swamy Temple ,Sirkazhi ,Collector Vadampidittu ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்