×

கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக கோயில் கோ சாலையில் பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கரூர், மார்ச் 13: கரூர் அருகே கிருஷ்ணன்கோவில் கோ சாலையில் வளர்க்கப்படும் பசுவிற்கு வளைகாப்பு (சீமந்தம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்தியாவில் உள்ள இந்துக்கள் பெரும்பாலும் பசுவை வணங்கும் பழக்கம் உண்டு. கரூர் - வாங்கல் சாலையில் தண்ணீர் பந்தல் பாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கோசாலையில் நாட்டு காங்கேயம் பசுவும், கன்றுக்குட்டியும் வளர்க்கப்பட்டு வருகிறது. பசு சினை பிடித்ததை அவற்றிற்கு சீமந்தம் (வளைகாப்பு) செய்ய அந்த கோவில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. 7 மாத கர்ப்பமடைந்த பசுமாட்டிற்கு பெண்களுக்கு செய்வது போன்ற செய்ய வேண்டும் என முடிவு செய்து வளையல்களால் தைக்கப்பட்ட புடவை, வால் மற்றும் திமிலுக்கு வாழை மட்டையை கொண்டு பூக்களால் அலங்கரித்து கட்டினர். வளையல்களால் ஆன மாலை, பூக்களால் செய்யப்பட்ட மாலைகளை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாட்டின் உடல், கொம்பு உள்ளிட்ட இடங்களில் பெண்களால் சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குருக்கள் மந்திரம் முழங்க பசுவின் மீது பூக்கள் தூவப்பட்டது. அதனை தொடர்ந்து பசுவிற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பலரும் பசுவினை சுற்றி வந்து தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பசுவிற்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு 7 வகையான உணவுகள் வழங்கப்பட்டது. வட மாநிலங்களில் நடத்தப்படும் இது போன்ற சம்பிரதாயங்கள் கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெற்றதை பலரும் வித்தியாசமாக பார்த்துச் சென்றனர். பசுவிற்கு சீமந்தம் செய்த நிகழ்ச்சியானது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பசுவிற்கான ஆன்மீக நம்பிக்கையும், மரியாதையும் அதி அதிகரித்துள்ளது என்றால் மிகை ஆகாது.

Tags : Karur ,Koil Ko road ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்