மேற்கு தாலுகா அலுவலகத்தில் மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்கள்

மதுரை: மதுரை மேற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த பல்வேறு மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மேற்கு தாலுகா அலுவலக வளாகம் விராட்டிபத்துவில் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் ஒரு பகுதி மாநகராட்சிக்கு சொந்தமானதாக உள்ளது, இங்கு பல்வேறு வகையான மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. இதனால் இந்த பகுதி சிறிய அளவிலான காடுகள் போல காட்சி அளித்து வந்தது. இந்நிலையில் இங்குள்ள மரங்களை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவில் வெட்டியுள்ளனர். பிறகு ஜன்னல், நிலைகள், கதவுகள் தயாரிக்கும் வகையில் மரங்களை துண்டு, துண்டாக வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர். தேவையில்லாத கொப்புகளை அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டனர். வெட்டப்பட்ட மரங்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: