×

பழநி வனப்பகுதியில் விலங்குகள் தாகம் தணிக்க தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம் கொளுத்தும் வெயிலால் வனத்துறை நடவடிக்கை

பழநி: கொளுத்தும் வெயிலின் காரணமாக பழநி வனப்பகுதிகளில் விலங்குகள் நீர் அருந்துவதற்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி வனச்சரகம். இவ்வனச்சரகத்தில் வரிப்புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், கேளையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு விளைவிக்கப்பட்டிருக்கும் விளைபயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் வனப்பகுதி எல்லைகளில் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் போதிய பலன் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து வனப்பகுதியை விட்டு விலங்குகள் வெளியே வராமல் இருப்பதற்காக வனப்பகுதிகளில் ஏராளமான தண்ணீர் தொட்டிகள் வனத்துறையினரால் கட்டப்பட்டன. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வனப்பகுதி வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் விளைநிலங்களுக்கு குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை தடுக்கும் வகையில் வனவிலங்குகள் தாகம் தணிப்பதற்காக வனப்பகுதிகளில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினரால் நீர் நிரப்பப்பட்டு வருகின்றன.  சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனால் தண்ணீர் குடிப்பதற்காக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவது குறையுமெனவும் பழநி வனச்சரகர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Palani forest ,
× RELATED காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்: இழப்பீடு கேட்டு விவசாயிகள் மனு