அதிகாலை ரோந்து சென்ற எஸ்ஐ கால் முறிந்தது செய்யாறு அருகே விபத்து தனியார் கம்பெனி பஸ் மோதி

செய்யாறு: செய்யாறு அருகே அதிகாலை ரோந்து சென்றபோது, தனியார் கம்பெனி பஸ் மோதிய விபத்தில் எஸ்ஐ கால் முறிந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சப்-டிவிஷனுக்கு உட்பட்ட மோரணம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிபவர் ராமகிருஷ்ணன்(55). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில் ஊர்க்காவல்படை வீரர் சந்தோஷ் என்பவரை அழைத்துக்கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில் அசனமாபேட்டை கூட்ரோடு டாஸ்மாக் கடை அருகே உள்ள கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நைட் பீட் நோட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வந்தார். அப்போது அருகில் இறைச்சி கடையில் லாரியில் இருந்து கோழிகளை இறக்கி கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி கோழிகளை இறக்கும்படி ராமகிருஷ்ணன் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ஒரகடம் பகுதியில் இருந்து கலவைக்கு தொழிலாளர்களை ஏற்றி சென்ற தனியார் கம்பெனி பஸ் ராமகிருஷ்ணன் மீது எதிர்பாராமல் மோதியது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணனின் இடதுகால் முறிந்தது. படுகாயம் அடைந்த அவரை ஊர்க்காவல்படை வீரர் சந்தோஷ் மற்றும் பொதுமக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: