(தி.மலை) அம்ரித்பாரத் திட்டத்தில் ₹6 கோடி நிதி ஒதுக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த

திருவண்ணாமலை, மார்ச் 12: திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த ₹6 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என ெதன்னக ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் எம்பி அண்ணாதுரை வலியுறுத்தி உள்ளார். திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி ஏற்கனவே முதற்கட்டமாக ₹2.5 கோடி மதிப்பிலும், இரண்டாவது கட்டமாக ₹2 கோடி மதிப்பிலும் நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை ஆன்மிக நகரம் என்பதால், ரயில் நிலைய முகப்பு பகுதியை கோயில் கோபுரம் வடிவில் அமைத்தல், பயணிகளுக்கான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்காக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ₹6 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என திருச்சியில் நடந்த தென்னக ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக, தென்னக ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் எம்பி சி.என்.அண்ணாதுரை தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை- திண்டிவனம் புதிய ரயில் பாதைத் திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இத்திட்டதுக்கு தற்போது ₹50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது போதுமானதில்லை. எனவே, இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றும் வகையில் நிதியை ஒதுக்கி பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புதிய வழித்தடம் அமைந்தால், ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.

அதேபோல், புதுச்சேரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தென் மாநிலங்களையும், வட மாநிலங்களையும் இணைக்கும் ரயில் சேவையாக உளளது. ஆனால், இந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 13 ஸ்டேஷன்களில் மட்டுமே நின்று செல்கிறது. எனவே, திருவண்ணாமலையில் இந்த ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் ஆன்மிக பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்.

திருவண்ணாமலை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி, அடிப்படை மேம்படுத்தும் பணிகள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக ₹4.50 கோடியில் நடந்து வருகிறது. எனவே, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ₹6 கோடி நிதியை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும். திருவண்ணாமலை வழியாக செல்லும் காட்பாடி - விழுப்புரம் ரயில் பாதையை இருவழிப்பாதையாக தரம் உயர்த்த வேண்டும். அதன்மூலம், இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: