×

கருப்பட்டி மிட்டாய், இயற்கை ஐஸ்கிரீம், ரோஜா குல்கந்து பாளை கல்லூரியில் 300 வகையான பாரம்பரிய உணவு கண்காட்சி

நெல்லை, மார்ச் 12:  பாளை இக்னேஷியஸ் கல்வியியல்   கல்லூரி  மற்றும் நெல்லை பசுமை சங்கம் இணைந்து நடத்திய `இயற்கையுடன்  இணைந்து வாழ்'  என்ற தலைப்பில் சிறுதானிய மற்றும் பாரம்பரிய இயற்கை உணவு  கண்காட்சி   கல்லூரி வளாகத்தில் நடந்தது. கண்காட்சியை ரைஸ் குளோபல் அமைப்பு  தலைவர்  ஜெகத் கெஸ்பர்ராஜ் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,  ‘பாரம்பரிய உணவுகள் வெறும் காட்சிப்படுத்துதல் மட்டுமின்றி அனைவரின் அன்றாட  உணவாக மாறவேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் நோக்கம். விரைவில்  பொதுமக்களுக்கான பெரிய அளவில் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்படும்’ என்றார்.  இயற்கை விவசாயிகள் சங்க செயலாளர்  சுப்பிரமணியன், சரவணன் சின்னப்பா,  ஆகியோர் பேசினர்.

கல்லூரி செயலர் ஜெம்மா,  கல்லூரி முதல்வர்  வசந்தி மெடோனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் கல்வியியல்  கல்லூரி மாணவிகள், சிறுதானிய மற்றும் பாரம்பரிய  இயற்கை உணவு பொருட்களை  தயாரித்து காட்சிப்படுத்தியதுடன் அதன்  அருகில் உணவு வகைகளின் பயன்கள்  குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கத்துடன் வாசகம் எழுதி  வைத்திருந்தனர்.  மாணவிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து பனை  பொருட்களால்  தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், நவதானிய உணவு வகைகள், மரபு  இனிப்பு வகைகள், லட்டு, புட்டு, கருப்பட்டி மிட்டாய், இயற்கை ஐஸ்கிரீம்,  ரோஜா இதழ் குல்கந்து,  பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, நாட்டு கோழிமுட்டை,  புதினா ஜீஸ்,  உள்ளிட்ட  300க்கும் மேற்பட்ட இயற்கை உணவு வகைகளை தயாரித்து  பார்வையாளர்களை  கவர்ந்தனர். மேலும் இயற்கை உரங்கள்,  வீட்டுவைத்திய மூலிகை பொடிகள், இயற்கை  அழகு பொருட்கள், மண்பாண்ட  கலைப்பொருட்கள் போன்றவற்றையும் மாணவிகள் தயாரித்து  அரங்குகள் அமைத்து  காட்சிப்படுத்தி இருந்தன. இயற்கை மற்றும் பாரம் பரிய  உணவு  வகைகளை ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் ஆர்வமுடன் ஒரே இடத்தில் கண்டு  களித்து சென்றனர்.

Tags : Palai ,
× RELATED நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது ‘‘போக்சோ”