அரசு கல்லூரியில் மாணவியர் விடுதி துவக்கம்

நாமக்கல், மார்ச் 12: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவியர் விடுதியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது, அத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில், மாணவ- மாணவியர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளுக்கு பதிலாக, அவற்றை மறுசீரமைத்து தேவையுள்ள 15 இடங்களில், ₹1 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில், கல்லூரி விடுதிகள் துவங்கப்படும் என துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாணவியர் விடுதி துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் மாணவியர் விடுதி கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில், தற்காலிகமாக முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் விடுதி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக மாணவிகள் விடுதியை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த விடுதிக்கு தேவையான அடிப்படை தளவாட பொருட்கள் எடுத்து வரப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்ட, 100 மாணவியர் தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, தற்போது விடுதி செயல்பட துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன், கல்லூரி முதல்வர் ராஜா, பேராசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: