×

உள் நோயாளிகள், தீவிர சிகிச்சை பிரிவுகளில் சோதனை குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய தர சான்றிதழ் குழு ஆய்வு டீன், டாக்டர்களுடன் ஆலோசனை

நாகர்கோவில், மார்ச் 12: கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய தர சான்றிதழ் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடந்த 2004ம் ஆண்டு 600 படுக்கை வசதிகளுடன் ஆசாரிபள்ளத்தில் தொடங்கப்பட்டது. தற்போது 1,206 படுக்கை வசதிகள் உள்ளன. பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் இயங்கி வருகிறது. தென் மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக உள்ளது. நெல்லை,  தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிகம் பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். பல்வேறு உயர் ரக மருத்துவ வசதிகளுடன், சிகிச்சை பிரிவுகள் உள்ளன. தற்போது மருத்துவக்கல்லூரியில் ஆண்டுக்கு 150 மாணவ, மாணவிகள்  சேர்க்கப்பட்டு வருகிறார்கள். மயக்கவியல், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்வற்றில் உயர் மருத்துவ படிப்பும் உள்ளது.

 இருதய நோய், கேன்சர், சிறுநீரகவியல், மகப்பேறியல், பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்டவற்றில் உயர் ரக சிகிச்சைகள், அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன.  நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் தேசிய தர சான்றிதழ் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக மருத்துவக்கல்லூரி சார்பில், மருத்துவக்கவுன்சிலுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான நடவடிக்கையின் ஒரு கட்டமாக டெல்லியில் இருந்த தேசிய தர மருத்துவ சான்று அங்கீகார குழுவில் இருந்து டாக்டர் ரமேஷ் காமத் தலைமையிலான குழுவினர் நேற்று கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு வந்தனர்.

இந்த குழுவினர் முதற்கட்டமாக நேற்று காலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ் மற்றும் டாக்டர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் லியோ டேவிட், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் டாக்டர் விஜயலெட்சுமி, டாக்டர் ரெனிமோள், பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜெயலால் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்கு பின், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மத்திய குழு ஆய்வில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கான வசதிகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், மருத்துவக்கல்லூரி வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவ, மாணவிகளுக்கான விடுதி வசதிகள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டனர்.

மருத்துவமனை பராமரிப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், உள் நோயாளிகளுக்கான  சிகிச்சை வார்டுகள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வு முடிவுகளை தரச்சான்று குழுவில் சமர்ப்பித்த பின், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தேசிய தர சான்றிதழ் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் கூறினர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தேசிய தர சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசின் நிதி உதவிகள் இன்னும் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் என்றும் கூறினர்.

Tags : Dean ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து...