திண்டுக்கல் வேடபட்டியில் எரிவாயு மயானத்தை மேயர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் மின் மயானமும், வேடப்பட்டியில் எரிவாயு மயானமும் உள்ளது. இதில் ஆர்.எம்.காலனியில் உள்ள மின்மயானம் மட்டுமே தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது எரிவாயு மயானம் முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்கள் சிதிலமடைந்து விட்டது. கொரோனா காலத்தில் மட்டும் இந்த எரிவாயு மயானம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உடல்கள் எரியூட்டப்பட்டன. அதன்பிறகு இந்த எரிவாயு மயானத்தை பயன்படுத்துவது குறைந்து போனது. இந்நிலையில் செயல்படாமல் உள்ள எரிவாயு மயானத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சந்தைரோடு வியாபாரிகள் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் வீரபாண்டி ஆகியோர் பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மாநகராட்சி மேயர் இளமதி நேற்று வேடப்பட்டி எரிவாயு மயானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேயர் மயான கட்டிடங்களின் நிலை, காத்திருப்போர் அறை, உடல்களை எரியூட்டும் தகனமேடை ஆகியவற்றின் உறுதி தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மேயர் சேதமடைந்த கட்டிடஙக்ளை சீரமைப்பது, எரிவாயு மயானத்தை மின் மயானமாக மாற்றுவது தொடர்பான திட்ட மதிப்பீட்டை தயாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டர். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வேடப்பட்டி எரிவாயு மயானத்தை சீரமைத்து விரைவில் மின்மயானமாக மாற்றப்படும்’ என்றனர்.

Related Stories: