முத்தூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்

திருப்பூர், மார்ச் 11:முத்தூர் பேரூராட்சியில் ரூ.2.08 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சியில் பொதுசுகாதார வளாக கட்டிடத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். மேலும், புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, கேமரா அமைக்கும் பணி என பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: முத்தூர் பேரூராட்சி காந்திநகரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. சக்கரைப்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

செங்கோம்பாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.72.60 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. செங்கோடம்பாளையம் முதல் நொய்யல் ஆறு வரை தார்ச்சாலைகளை பலப்படுத்தும் பணிகள், புதுப்பாளையத்தில் ரூ.81 லட்சம் மதிப்பில் புளியங்காட்டுத்தோட்டம் வீதி, நகம்பாளையம் மற்றும் பெருமாள்புதூர் கிழக்கு, குறுக்கு வீதி ஆகிய பகுதிகளில் மண் சாலைகளை தார்ச்சாலைகளாக அமைக்கும் பணி என மொத்தம் ரூ.2.8 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதன் பின்னர் முத்தூர் பேரூராட்சிக்கு ரூ.4.40 லட்சம் மதிப்பில் மின்சாரத்தால் இயக்கும் குப்பை அள்ளும் 2 வண்டிகளை அமைச்சர் வழங்கினார். மேலும், செங்கோடம்பாளையத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் முத்தூர் பேரூராட்சி தலைவர் சுந்தராம்பாள், துணைத்தலைவர் அப்பு, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: