×

நெல்லை மாவட்ட மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது சப்-கலெக்டர் பேச்சுவார்த்தையில் தீர்வு

நெல்லை, மார்ச் 11: சேரன்மகாதேவி சப்-கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் குமரி விசைப்படகு மீனவர்கள் - நெல்லை நாட்டுப்படகு மீனவர்கள் பிரச்னைக்கு சுமூக முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 1ம் தேதி இடிந்தரை கடல் பகுதியில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் இடிந்தகரை நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குமரி மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீது மோதியதில் வினோத், அண்டன் ஆகிய இரு மீனவர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் நெல்லை மாவட்ட நாட்டுப் படகு மீனவர் பிரதிநிதிகளும், குமரி மாவட்ட விசைப்படகு மீனவ சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்ற பேச்சுவார்த்தை, வள்ளியூர் நடைபெற்றது. இரு மாவட்ட வருவாய் உயரதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983ன் படி உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீன்வள அலுவலர்களால் முறையாக அமல்படுத்த வேண்டும்.

இடிந்தகரை மற்றும் சின்னமுட்டம் மீனவர் கிராமங்களிடையே நடைபெற்ற மீன்பிடி பிரச்னையில் தொடர்புடைய பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகு குறைந்தது 6 மாத காலம் மீன்பிடி தொழில் முடக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை முடியும் வரை மீன்பிடி விசைப்படகு கடலுக்கு செல்லக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983ன் படி தவறிழைக்கும் படகுகளின் மீது அபராத தொகை விதிக்கப்படுகிறது. அபராத தொகையுடன் இனிவரும் காலங்களில் மீன்பிடி தொழில் முடக்கமும் செய்யப்படும் மற்றும் வருவாய் துறையினர் மூலம் அடிக்கடி தவறிழைக்கும் படகுகளின் உரிமையாளர் மீது இந்திய குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 107ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதனை கண்காணிக்க ரோந்து படகுகள் மூலம் இரு மாவட்ட கடல் பகுதியில் கடலோர காவல் குழுமத்துடன் இணைந்து ரோந்து பணியும் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983ன் படி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது- பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்று நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்ற தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Nellai District Fishermen ,
× RELATED நெல்லை மாவட்ட மீனவர்கள் போராட்டம்...