தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோலார் மின்வேலி அமைக்க கோரி வழக்கு வனத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை, மார்ச் 11: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சோலார் மின் வேலி அமைக்கக் கோரிய வழக்கில் வனத்துறை தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கருத்தபிள்ளையூரைச் சேர்ந்த வின்சென்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கடையம், குற்றாலம் மற்றும் கடையநல்லூர் ஆகிய பேரூராட்சிப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இங்கு மலையடிவார பகுதி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஏராளமான விவசாயிகள் உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள் மற்றும் பல வகையான மான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன.

வனவிலங்குளால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதுடன், சில நேரங்களில் மனிதர்களும் தாக்கப்படுகின்றனர். தென்னை, வாழை உள்ளிட்டவையும் அடிக்கடி சேதமாக்கப்படுகின்றன. ஆகவே, வனவிலங்குகளால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான நவீன மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரண உதவிகளும், விவசாய நிலங்களுக்கு உரிய நிவாரணமும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் எல்லையில் சூரிய மின்சக்தியால் இயங்கக்கூடிய மின் வேலிகள் அமைத்து வன விலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘சமீபத்தில் கூட 3 யானைகள் மின்வேலியில் சிக்கி பலியானதே’’ எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் மனுவிற்கு வனத்துறை முதன்மை செயலர், வனத்துறை முதன்மை தலைமை வனக்காவலர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: