விழுப்புரம் அருகே பரபரப்பு காதல் திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸ் ஏட்டு தீக்குளிப்பு

விழுப்புரம், மார்ச் 11: விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஏட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கஞ்சனூரை சேர்ந்தவர் நடராஜன் (38). இவர் கடந்த 2014ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அம்பலப்பட்டியை சேர்ந்த மணிமேகலை (37) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மணிமேகலை கடந்த 2006ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது இவர்கள் விழுப்புரம் அருகே பாணாம்பட்டு பாதை கவுரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மிதுன், நித்தேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே, மணிமேகலை சென்னை திருவல்லிக்கேனி உள்ளிட்ட மாநகர காவல்நிலையங்களில் பணியாற்றி வந்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம்தான் விழுப்புரம் மாவட்டத்துக்கு இடமாறுதலாகி வந்துள்ளாராம். தற்போது விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மணிமேகலை சென்னையில் பணியாற்றி வந்த போது கடந்த 2018ம் ஆண்டு முதல் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 3 மாதமாக ஒன்றாக வசித்து வந்த நிலையில் அவர்களுக்குள் மேலும் குடும்பத்தகராறு அதிகரித்ததாம்.

இந்நிலையில், நேற்று காலை கிச்சனுக்கு சென்ற மணிகேமலை அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டதும் நடராஜன் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன்

 மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கணவர் நடராஜனிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு, அக்கம்பக்கத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: