×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் வழிமுறைகளின்படி சாலை பணி மேற்கொள்ள உத்தரவு: கண்காணிக்க குழு

சென்னை, மார்ச் 11: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் வழிமுறைகளின்படி சாலை பணி மேற்கொள்ள வேண்டும் என்றும், பணிகள் தரமாக நடைபெறுவதை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படியும், மாநகராட்சி மேயர் பிரியா ஆலோசனையின்படியும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் 387 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து செல்லும் சாலைகளும், 5200 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உட்புறச் சாலைகளும் உள்ளன. தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 405 சாலை பணிகள் 101 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.104 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு மற்றும் சேமிப்பு நிதியின் கீழ் 705 சாலைகள் 125 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.68.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 630 சாலைகள் நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் 1336 சாலைகள் 219 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட உள்ளன.
 இந்த சாலை பணிகள் தரமாக மேற்கொள்வதை கண்காணிக்க மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இணை ஆணையாளர் (பணிகள்), வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் இரவில் சாலை பணி நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சாலைப்பணிகள் தொடர்பாக உரிய அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சாலைப்பணிகள் மேற்கொள்ளும்போது, கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தி உள்ளார். அதில், சாலைப்பணிகள் மேற்கொள்வதற்கு இடையூறு ஏதேனும் இருந்தால் அது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டு சரிசெய்திட வேண்டும். சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது உரிய தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும்.

சாலைப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக இயந்திரங்களை கொண்டு சரியாக சத்தம் செய்யப்பட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக ஏற்கனவே இருந்த சாலையினை தேவையான அளவிற்கு அகழ்ந்தெடுக்க வேண்டும். அகழ்தெடுக்கப்பட்ட சாலையின் ஆழத்தையும் அமைக்கப்பட்ட சாலையின் உயரத்தையும் சரி பார்த்திட வேண்டும். அகழ்ந்தெடுக்கப்பட்ட சாலையின் தார் கலவைகள் மற்றும் இதர பொருட்கள் அகற்றப்பட்டு அதனை உறுதி செய்திட வேண்டும். தார்க் கலவையின் தரம் மற்றும் அதன் பேக்கிங் தேதி சரிபார்க்கப்பட வேண்டும். தார்க்கலவை ஒரே சீராக பிணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சுண்ணாம்புத் தூள் மூலம் அமைக்கப்படும் தார்சாலையின் அகலம் சரியாக இடப்பட்டு, அதன்படி தார்ச்சாலை அமைத்து அதனை சரிபார்த்திட வேண்டும். சாலையில் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்ப விவரங்களுடன் கூடிய ஊற்று அட்டடையின் விவரத்தினை சரிபார்த்திட வேண்டும். கலவையின் வெப்பநிலையை (140நீ - 160நீ) வாகனத்திலும், தளத்திலும் சாலையில் பயன்படுத்தும் போதும் சரிபார்க்கப்பட வேண்டும். தார்க்கலவையில் உள்ள ஒட்டும் தன்மையினை சாலை அமைக்கும் போது சரிபார்க்கப்பட வேண்டும். தார்ச்சாலை அமைக்கும் போது தளர்வான நிலையில் அதன் அடர்த்தி அளவினை சரிபார்க்க வேண்டும்.

தார்ச் சாலை அமைக்கும் போது உருளை இயந்திரம் 2 எண்களும், ஒரு பொக்லைன் இயந்திரமும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தார்ச்சாலை அமைத்து அதன்மேல் அழுத்தம் தரும் இயந்திரத்தின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 5 கி.மீ. என்கிற அளவில் இருக்க வேண்டும். தார்க்கலவையின் வெப்பம் 90 டிகிரி செல்சியஸ் ஆவதற்கு முன்பாக தார்ச்சாலை அமைத்து உருளையிடப்பட வேண்டும். இப்பணிகள் யாவும் அலுவலர்களாலும், பொறியாளர்களாலும் கண்காணிப்பு செய்து தரமான சாலை அமைப்பதை உரிய நெறிமுறையின்படி உறுதி செய்திட வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Corporation ,Monitoring Committee ,
× RELATED அரசுப்பேருந்து ஒட்டுநர்,...