வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு மணி நேர அலுவலக வெளிநடப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளாக துணை ஆட்சியர் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும். பட்டாதாரி அல்லாத வருவாய்த் துறை அலுவலர்களின் பணிகளை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பு அரசாணை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள 9 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், 2 ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையிலான 450 அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சேகர், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலச் செயலாளர் தமிழரசன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் வளனரசு நன்றி கூறினார்.

Related Stories: