வேலூர்: வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கும், சில்லரையில் பீடி, சிகரெட் விற்ற கடைக்காரர்களுக்கும் சுகாதாரத்துறையினர் நேற்று அபராதம் விதித்தனர். தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பதும், கடைகளில் சில்லரையில் பீடி, சிகரெட் விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் இதுதொடர்பான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக சில்லரையில் பீடி, சிகரெட் விற்பது, தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள், புகையிலை ெபாருட்கள் விற்பனை, வெளிநாட்டு சிகரெட் விற்பனை தொடர்பான ரெய்டு நடத்தி வருகின்றனர். அதேபோல் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களையும் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக நேற்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி உத்தரவின் பேரில் மாவட்ட புகையிலை பொருட்கள் தடுப்புப்பிரிவு ஆலோசகர் ஜெய தலைமையிலான குழுவினர் வேலூர் பழைய பஸ் நிலையம், நியூ சிட்டிங் பஜார், பழைய மீன் மார்க்கெட் பகுதி, லாங்கு பஜார், மண்டி வீதி என பல பகுதிகளில் பங்க் கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றில் ரெய்டு நடத்தினர். அப்போது பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அதே இடத்திலேயே அபராதம் விதித்தனர்.மேலும் கடைகளில் பீடி, சிகரெட் சில்லரையில் விற்ற கடைகளையும் அடையாளம் கண்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். அத்துடன், கடையின் முன்பு சிகரெட், பீடி விற்பனை தொடர்பான விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். காலை தொடங்கிய இந்த ரெய்டில் மதியம் வரை ரூ.5 ஆயிரம் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.