திருச்சி, மார்ச் 10: திருவானைக்காவல் கோயிலுக்கு சொந்தமான ரூ.45 லட்சம் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவரிடம் இருந்து மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஸ்ரீரங்கம் போலீசார் ஒப்படைத்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, திருவானைக்காவல் காந்தி சாலையில் வார்டு-பி, பிளாக் 46ல், சர்வே எண்.2072/6, கதவு எண் 95/ஏ1-ல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த புல எண்ணில் 1580.35 சதுரடி இடமானது ராஜகோபால் என்பவருக்கு கோயில் நிர்வாகம் மனை வாடகையாக விட்டிருந்தது.
மேற்படி இடத்தின் அனுபவதாரான மீராமொய்தீன் என்பவர் இந்து சமய அறநிலையத்துறை நியாய வாடகை நிர்ணயக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையினை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளையில் தொரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை மீராமொய்தீனை அந்த இடத்தை காலி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று ஸ்ரீரங்கம் வருவாய் ஆய்வாளர், வெள்ளித்திருமுத்தம் விஏஓ, ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் கோயில் இடத்தை மீட்டு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் நிர்வாக உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரிடம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன் ஒப்படைத்தார். மேற்படி சொத்தின் மதிப்பு ரூ.45,00,000.