×

அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அனைத்து வளர்ச்சி பணிகளும் சிறப்பாக முடியும்: திருநாவுக்கரசர் எம்பி பேச்சு

திருச்சி, மார்ச் 10: ஒன்றிய, மாநில அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அனைத்து வளர்ச்சி பணிகளும் சிறப்பாக முடியும் என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசன் கூறினார்.
திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். டிஆர்ஓ அபிராமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், நகராட்சி தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப்பின் கண்காணிப்புக்குழு தலைவர் திருநாவுக்கரர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசின் 42 துறைகள் சார்பில் மாவட்ட முழுவதும் பல்வேறு வகையான மக்கள் நலப் பணிகள் நடக்கின்றன. இதுகுறித்து ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். அதன்படி இக்கூட்டம் இன்று (நேற்று) திருப்தியாக நடைபெற்றுள்ளது. நமது மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் சிறப்பாக செயல்படுகின்றனர். மாவட்ட வளர்ச்சிக்கு கூடி ஆலோசித்து முடிவெடுக்கிறோம். நமக்கு நல்ல முதல்வர் இருக்கிறார்.

நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலம் நன்றாக வளர்ந்து வருகிறது. திருச்சி மாவட்டமும் வளர்ச்சி அடைய வேண்டும் என விவாதங்கள் நடத்தி உள்ளோம். மாவட்ட மக்களுக்கு நன்மைகள் செய்ய தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும் ஆண்டுக்கு என்ன ஒதுக்கீடு வருகிறதோ அதை முறைப்படுத்தி செய்து வருகின்றனர். தேவைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு பொறுத்து திட்டப்பணிகள் நடைபெறும். பஞ்சாயத்து சாலை பணிகளுக்காக ரூ.4,000 கோடி வழங்கப்படும் என தெரிவித்து, ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்குகின்றனர். அதை பொறுத்தே பணிகள் நடக்கும். ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் அனைத்து பணிகளும் நடைபெறாது. ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து வளர்ச்சி பணிகளையும் மேற்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு திருநாவுக்கரசர் எம்பி கூறினார்.

Tags : Thirunavukarasar ,
× RELATED கல்லிலும் செம்பிலும் கழுமலத்தார் பதிகங்கள்