வேலூர் பெண்கள் சிறையில் மகளிர் தினத்தையொட்டி பெண் கைதிகளுக்கு அறுசுவை உணவு

வேலூர், மார்ச் 10: மகளிர் தினத்தையொட்டி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பெண் கைதிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. உலக மகளிர் தினத்தையொட்டி அனைத்து பெண்கள் தனிச்சிறைகள், பெண்கள் தனி கிளை சிறைகளில் பெண் கைதிகளுக்கு இடையே போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நேற்று முன்தினம் மகளிர் தின விழா மற்றும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவுக்கு சிறைத்துறை டிஐஜி செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆந்திர ஐஜி சீனிவாசராவ் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து, கைதிகளுக்கு இடையே பாட்டு, நடனம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, மகளிர் தினத்தையொட்டி, நேற்று பெண் கைதிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்க வேலூர் கிளை, பெண்கள் சார்பில் பெண்கள் தனிச்சிறையில் நேற்று 250 மூலிகை மற்றும் பழ மரக்கன்றுகள், நூலகத்திற்கு 100 புத்தகங்கள் ஆகியவற்றை டிஐஜி செந்தாமரை கண்ணனிடம் வழங்கினர். அப்போது சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், சிறை மருத்துவர் பிரகாஷ் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மனநல மருத்துவர், குழந்தை நல மருத்துவர்கள் கலந்து கொண்டு மன நலம் மற்றும் பெண்கள் நலம் சார்பாக மருத்துவ குறிப்புகள் வழங்கினர்.

Related Stories: