×

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா

திருவிடைமருதூர், மார்ச் 10: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று இரவு பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. தமிழகத்தில் தொன்மையான வைணவ கோயில்களில் புகழ் பெற்றதும், தென்னக திருப்பதி என்றும் அழைக்கப்படுவது ஒப்பிலியப்பன் கோவில். நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார் ஆகிய 4 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதால் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.இக்கோயிலில் பெருமாள் பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என 5 மூர்த்திகளாக நம்மாழ்வாருக்கு தரிசனம் கொடுத்த தலமாகும்.

இத்தலத்து பெருமாள் பங்குனி மாதம் ஏகாதசியுடன் கூடிய திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். இதனால் அவதார தினத்தை 10 நாள் பிரம்மோற்சவமாக பங்குனி பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று இரவு பகவத் பிரார்த்தனை, சங்கல்பம், சேனை முதல்வர் புறப்பாடு, புற்றுமண் எடுத்தல், பாலிகை பூஜை, வாஸ்து பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் இவ்விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் விழா கொடியேற்றப்படுகிறது. விழாவின் 10 நாட்களும் தினமும் காலையில் வெள்ளி பல்லக்கும், மாலையில் வாகன புறப்பாடும் நடைபெறும். இரவில் பெருமாள், தாயார் கண்ணாடி திருப்பள்ளி அறைக்கு திருக்கைத் தலத்தில் எழுந்தருளுகின்றனர். கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags : Panguni festival ,Thirunageswaram Oppiliyappan temple ,
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா