×

காளியம்மன், முனியப்பன் கோயிலில் தீ மிதி விழா

இடைப்பாடி: இடைப்பாடி வெள்ளாண்டி வலசை ஓம் சக்தி காளியம்மன், முனியப்பன் கோயில் விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இடைப்பாடி வெள்ளாண்டி வலசை ஓம்சக்தி காளியம்மன், முனியப்பன் கோயில் மாசி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து தீமிதி விழா நேற்று காலை நடந்தது. முதலில் பூசாரி கரகத்தை எடுத்தபடி, தீ மிதித்து துவக்கி வைத்தார். பின்னர் காணியாச்சிக்காரர்கள், பக்தர்கள் என வரிசையாக குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். பெண்கள் கைக்குழந்தை தூக்கி அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதில் சிறுவர் முதல் பெண்கள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தீ மிதித்தனர். காளியம்மன் திருமண கோலத்தில் அருள்பாலித்தார். பின்னர், பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பலியிட்டும் வழிபாடு செய்தனர். விழாவில் இடைப்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரலேகா தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.



Tags : Kaliyamman ,Muniyappan ,
× RELATED காளியம்மன் கோயில் திருவிழா களைகட்டிய...