×

ஓசூர் தேர்பேட்டையில் 30 டன் குப்பை சேகரிப்பு

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, மலைக்கோயில் மற்றும் தேர் பேட்டை பகுதியில், சுமார் 30 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டது.  ஓசூரில் மலைமீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்.  இதையொட்டி, பல்வேறு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், 500க்கும் மேற்பட்ட இடங்களில்  அன்னதானம், நீர்மோர், பானகம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவின் போது, வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், பேப்பர் தட்டுகள், பேப்பர் டம்ளர்கள் என சுமார் 30 டன் குப்பைகள் சேகரமானது. இதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 150 பேர், சுழற்சி முறையில் இரவு பகலாக சேகரித்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து மாநகராட்சி மேயர் சத்யா கூறுகையில், ‘பொதுமக்களின் நலன் கருதி 150 பணியாளர்கள் சுகாதாரப்பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் இரவு, பகலாக நடமாடுவார்கள் என்பதால், தேர் பேட்டை முழுவதும், மலை மீதும் மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டது. தேர்பேட்டையில் 2 குடிநீர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்காக ஷிப்ட் முறையில் டிரைவர்கள் பணியில் இருந்தனர். பொதுமக்களுக்கென 40க்கும் மேற்பட்ட கழிவறைகள் அமைக்கப்பட்டது. இதுதவிர 5 மொபைல் டாய்லெட் பயன்படுத்தப்பட்டது. பச்சைக்குளம் அருகே பொது சுகாதார தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது,’ என்றார்.



Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு