மலை கிராமத்தில் வங்கி கிளை திறப்பு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை வட்டம், மலை கிராமமான பெட்டமுகிலாளம் ஊராட்சி காமகிரியில், இந்தியன் வங்கியின் 44வது கிளையை, கலெக்டர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார். பின்னர், வங்கி கணக்கு துவக்கியவர்களுக்கு பாஸ் புக் வழங்கினார். நிகழ்ச்சியில் தளி எம்எல்ஏ ராமசந்திரன், ஓசூர் சப் கலெக்டர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் வங்கி மண்டல பொது மேலாளர் பத்மாவதி காந்த் வரவேற்றார். பின்னர், கலெக்டர் பேசுகையில், ‘மலைகிராம மக்கள் வங்கி சேவை பெற, தேன்கனிக்கோட்டை அல்லது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஹள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. வங்கி சேவை இல்லாத கிராமத்திற்கு வங்கி சேவை அளிக்கும் வகையில் இந்த வங்கி கிளை உருவாக்கப்பட்டுள்ளது. மலைகிராம மக்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள்அனைத்தும் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்,’ என்றார். முன்னதாக, ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, மகளிர் தினத்தையொட்டி பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வங்கி மண்டல துணை பொதுமேலாளர் பழனிகுமார், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், கிளை மேலாளர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: