×

உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் 2 கன்று குட்டிகள் உட்பட 5 மாடுகள் பரிதாப பலி

கூடுவாஞ்சேரி:  வண்டலூரில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததை மிதித்த 2 கன்று குட்டிகள் உட்பட 5 மாடுகள் பரிதாபமாக பலியாகின. வண்டலூர் ஸ்டாலின் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (45). விவசாயி. இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் இவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள், ஒரு காளை, 2 கன்று குட்டிகள் ஆகியவற்றை வண்டலூர் ஏரிக்கரை அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்று விட்டுவிட்டு வீடு திரும்பியுளளார். பின்னர்,  அன்று மாலை 5 மாடுகளையும் வீட்டுக்கு அழைத்து வருவதற்காக சென்றார். அங்கு வெகு நேரமாக பல இடங்களில் தேடியும் மாடுகளை காணவில்லை.

இதனையடுத்து, அவர் இரவு நேரம் என்பதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். பின்னர், நேற்று காலை மீண்டும் அப்பகுதிக்கு சென்று மாடுகளை தேடினார். அப்போது, அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் 5 மாடுகளும் அறுந்து விழுந்துள்ள உயர் அழுத்த மின் கம்பியை மிதித்தபடி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து,  போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், வண்டலூர் கால்நடை டாக்டர் வித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர்,  உயிரிழந்து கிடந்த 5 மாடுகளை மீட்டு அதே பகுதியில் பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...