×

மகளிர் தினத்தையொட்டி மகளிர் குழுக்களுக்கு ரூ.11 கோடி வங்கி கடனுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

செங்கல்பட்டு: மகளிர் தினத்தையொட்டி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு  ரூ.11 கோடி  மதிப்பீட்டில்  வங்கி கடன் உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 132 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது. காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், 132 மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு ஐஓபி வங்கி சார்பில் ரூ.11 கோடி மதிப்பில் சுயதொழில் கடனுதவிகளை வழங்கி பேசியதாவது:  செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின்கீழ் 13,895 மகளிர் சுயஉதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவற்றில் ஊரகப் பகுதிகளில் 9,944 குழுக்களும் நகர்ப்புற பகுதிகளில் 3,491 குழுக்களும் செயல்படுகிறது. கடந்த ஆண்டு 10,491 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.750 கோடி வங்கி கடன் இலக்கு நிர்ணயித்து, இதுவரை 5,767 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.328 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, 132 மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.11 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டது. இதன்மூலம் 2018 மகளிர் பயன்பெறுகின்றனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடியால் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்து உள்ளனர். குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,139 மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய ரூ.29.15 கோடி வங்கி கடன் தள்ளுபடியால் 14,721 மகளிர் பயனடைந்து உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஐஓபி நிர்வாக இயக்குநர் சஞ்சய் விநாயக், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், மறைமலைநகர் நகராட்சி நகர்மன்ற தலைவர் சண்முகம், ஐஓபி முதுநிலை மண்டல மேலாளர் ராஜேஷ், முதுநிலை மேலாளர் தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Women's Day ,Minister ,Th.Mo.Anparasan ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி