×

கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித்திரிந்த எருமை, பசு மாடுகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி தொழுவத்தில் அடைப்பு

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி திரிந்த சுமார் 10க்கும் மேற்பட்ட எருமை மற்றும் பசு மாடுகளை அங்காடி நிர்வாகம் சார்பில் பிடிக்கப்பட்டு ஒரு மாடுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களில் ஒப்படைக்கப்பட்டன.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித்திரியும் எருமை மற்றும் பசு மாடுகளால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள நெற்குன்றம், சின்மயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் எருமை மற்றும் பசு மாடுகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி கழிவுகளை சாப்பிட சுற்றித்திரிகின்றன. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சப்படுகிறனர்.

எனவே கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதேபோல், கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி திரியும் மாடுகளை அங்காடி நிர்வாகம் பிடித்து அபராதம் செலுத்தி மாடு உரிமையாளர்களை எச்சரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி திரிந்த சுமார் 10க்கும் மேற்பட்ட எருமை மற்றும் பசு மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி புதுப்பேட்டை மாட்டு தொழுவத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ஒரு மாடுக்கு 2,000 என 10 மாடுகளுக்கு ரூ.20,000 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து அங்காடி நிர்வாகம் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் எருமை மற்றும் பசு மாடுகள் உள்ளே வரக்கூடாது என்று மாடு உரிமையாளர்களிடம் பல முறை கூறியும் மறுபடியும் மாடுகள் உள்ளே வருகிறது. மாடு உரிமையாளர்கள் அவர்களது இடத்தில் மாடுகளை கட்டிவைத்து பால் கறந்த பின்பு புண்ணாக்கு உள்ளிட்டவைகள் வைத்துவிட்டு அவிழ்த்து விடுகின்றனர். இதனால் அந்த மாடுகள் பல்வேறு சாலை, தெருக்களில் சுற்றித்திரிகிறது. உணவு தேவைப்படும் போது சாலைகளில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள், போஸ்டர்களையும் ஓட்டல்களில் வீசி எறியப்படும் உணவுகளையும் சாப்பிட்டுவிட்டு சாலைகளின் நடுவே படுத்து தூங்குவாதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாடு உரிமையாளர்கள் தங்களது இடத்தில் மாடுகளை கட்டி வைத்து பாதுகாக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

Tags : Koyambedu ,
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...