உளுந்தூர்பேட்டையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை, மார்ச் 9: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளராக உள்ள வேங்கையன் மற்றும்  இணை செயலாளர் பரமசிவம் ஆகியோர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், வெளியேறு, வெளியேறு தலைமை பதவிக்கு தகுதியில்லாத எடப்பாடியே அதிமுகவை விட்டு வெளியேறு என்பது உள்ளிட்ட வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. நேற்று காலை இந்த போஸ்டர்களை பார்த்த அதிமுக நகர செயலாளர் துரை தலைமையிலான நிர்வாகிகள் உடனடியாக அனைத்து போஸ்டர்களையும் கிழித்துவிட்டு இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வேங்கையன் மற்றும் பரமசிவம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து தன்னை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நகர செயலாளர் துரை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேங்கையன், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: