×

பாஜ.,பிரமுகர் மீது எஸ்பி ஆபிசில் மாஜி ராணுவ வீரர் மனு

கிருஷ்ணகிரி, மார்ச் 9: கிருஷ்ணகிரி அருகே, மாற்றுத்திறனாளியின் செயற்கை காலை பறித்துக் கொண்டு மிரட்டும் பாஜ., பிரமுகர் உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முன்னாள் ராணுவ வீரர் தனது குடும்பத்துடன் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பெலவர்த்தி பஞ்சாயத்து, வள்ளுவர்புரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் இளங்கோ. இவர் தனது குடும்பத்தினருடன், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நான், விபத்து ஒன்றில் காலை முழுவதுமாக இழந்து, செயற்கை கால் பொருத்திக் கொண்டு, பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இதே கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ., கட்சி பிரமுகர் மயில்வேலன் மற்றும் வேலு, ராஜா, செல்வகுமார் ஆகிய 4 பேரும், எனது வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை மறித்து, ₹1 லட்சம் கொடுத்தால் மட்டுமே, பாதை தருவதாக கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டினர். இது குறித்து கலெக்டரிடம் கடந்த 2021ம் ஆண்டு புகார் அளித்தேன். அதன் பேரில், வருவாய் துறை அதிகாரிகள் வந்து விசாரணை செய்து, பிரச்னையை சரி செய்தனர்.

அன்று முதல் மயில்வேலன் என்னை பழிவாங்கும் எண்ணத்துடன் சுற்றி வந்தார். நான் எங்கள் ஊரில் ஏரியை குத்தகைக்கு எடுத்துள்ளேன். ஏரியில் மீன் பிடிப்பதற்காக வைத்திருந்த 3 வலைகளை சிலர் திருடி சென்று விட்டனர். இந்நிலையில், மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக, கிருஷ்ணகிரி மார்க்கெட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வரும் போது,a மேகலசின்னம்பள்ளி ஏரி அருகே என்னுடைய வலை இருந்தது. என்னுடைய வலையை யார் எடுத்து வந்தது? என்று கேட்டதற்கு மயில்வேலன் மற்றும் அவரது கூட்டாளிகளான மாதேஷ், சக்திவேல், பொத்தையன் (எ) திம்மராஜ், சேகர், முனியப்பன் (எ)ஆனந்தகுமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து, என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். அதில், நிலைதடுமாறி கீழே விழுந்த போது, என்னுடைய இடது காலில் உள்ள செயற்கை கால் விழுந்து விட்டது. அதை எடுத்துக் கொண்ட அவர்கள், பலமுறை கேட்டும் என்னிடம் தரவில்லை. எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags : SP ,BJP ,
× RELATED மாணவர்களின் உயர்கல்வி கனவிற்கு...