×

15 வயது சிறுமியுடன் கட்டாய திருமணம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மகனின் தாய் மனு போக்சோவில் வழக்கு என மிரட்டி

வேலூர், மார்ச் 9: போக்சோவில் வழக்கு என மிரட்டி 15 வயது சிறுமியுடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மகனின் தாய் மனு அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. அதன்படி நேற்று நடந்த கூட்டத்திற்கு ஏடிஎஸ்பி குணசேகரன் தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். அப்போது காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலை சேர்ந்த சுந்தரா என்ற பெண் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணமாகி முதல் கணவரிடம் விவகாரத்து பெற்று ராஜி என்பவரை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனது 2வது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. எனது முதல் கணவருக்கு பிறந்த மகன் சசிகுமார் கடந்த மாதம் என்னிடம் தகராறு செய்து தாக்கிவிட்டு சென்றார். அதேபோல் தற்போது எனது 2வது கணவரின் மனைவியின் மகள்கள் என்னை தாக்கி கை எலும்பு உடைத்து வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். எனது வீட்டில் இருந்த 3 சவரன் நகை மற்றும் 15 ஆடுகளை திருடிச்சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டுபோன நகை மற்றும் ஆடுகளை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதேபோல், அரியூர் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவர் அளித்த மனுவில், ‘எனக்கு சொந்தமான நிலத்தை முருக்கேரியை சேர்ந்த பெருமாள் ஆக்கிரமித்து கட்டிட பணிகளை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டதற்கு எங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டுகிறார். எனவே என்னுடைய இடத்தை மீட்டு தரவேண்டும்’ என்றார். அணைக்கட்டு அடுத்த மேல்பள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி அளித்த மனுவில் கூறுகையில், ‘நான் ஆசனாம்பட்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றேன். எனது வெற்றிக்கு அதேபகுதியைச் சேர்ந்த அம்பிகா, சரவணன் உதவியாக இருந்தனர். இந்நிலையில் என் மகன் தாமரைக்கனி, ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு அம்பிகா மகள் உதவியாக இருந்தார். தேர்தலின் போது மகன் தாமரைக்கனி, காதலியிடம் சரிவர பேசவில்லை. இதற்கிடையில், அம்பிகா மற்றும் அவருடை மகள் இருவரும் சேர்ந்து, என் மகனை திருமணம் செய்து கொள்ள என மிரட்டியுள்ளனர்.

பின்னர், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் என் மகன் புகார் அளித்தார். விசாரணைக்கு வந்தபோது, அம்பிகா காதலியை திருமணம் செய்யாவிட்டால் உன்னை போக்சோவில் தள்ளிவிடுவேன் என் மகனை மிரட்டி உள்ளார். அப்போது, புகாரை திரும்பபெற என் மகனிடம் மஞ்சள் கயிற்றினை கட்டாயமாக 15வயது சிறுமியை தாலி கட்டியாக வேண்டும் என மிரட்டி தாலியை கட்டி வைத்து, போட்டோ வீடியோ எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையில் மகன் காதலித்த பெண்ணை வேறு திருமணம் செய்ய அம்பிகா துன்புறுத்தி உள்ளார். மீண்டும் என் மகன் மீது போக்சோவில் புகார் செய்துள்ளார். பொய்யாக எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஏராளமானோர் மனுக்கள் அளித்தனர்.

Tags : Vellore SP ,Boxo ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...