திருச்சி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் சார்பாக அகில உலக பெண்கள் தின விழா நேற்று திருச்சியில் கொண்டாடப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அரணா ஜெகதீசன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் சத்தியபிரியா, தொழில்நுட்ப கல்வி இயக்க இயக்குனர் லலிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவ்விழாவில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா பேசியதாவது: இன்றைய தினம் ஒரு பெண்ணாக எனக்கு முக்கியமான தினம். முன்பைவிட இன்றைய காலகட்டத்தில் நம் சமுதாயத்தில் பெண் சாதனையாளர்கள் அதிகம் வரவேற்கப்படுகிறார்கள். எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதித்து காட்டுவது பல பெண்கள் சாதனை படைக்க ஒரு ஊக்கும் அளிப்பதாக இருக்கிறது. தங்களுடைய படிப்பிற்காக, வேலைக்காக, கனவிற்காக நிறைய பெண்மணிகள் தொலைதூரம் தங்களது கனவு பாதையை நோக்கிச் செல்கின்றனர். இது பெண்கள் பற்றிய எண்ணங்களை சமுதாயத்தில் மாற்றியிருக்கிறது. வீட்டில் நம் தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், மகளாகவும் பெண்கள் தரும் ஊக்குவிப்பில் தான் அனைவரும் இன்று நம் கனவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். குடும்ப பாரத்தை சுமந்து அதை மகிழ்ச்சி என எண்ணி சிரிப்பவள் பெண் என்று பேசினார். விழாவில் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்துகொண்டனர்.